வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு அனுப்பும் பணத்தை, வீட்டுக்கே கொண்டு வந்து தரும் புதிய திட்டத்தை தபால் துறை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. இதற்காக சர்வதேச நிதி அமைப்பான யூரோகிரோவுடன் தபால் துறை இணைகிறது.
வெளிநாட்டில் பணிபுரிபவர்கள் தங்கள் பெற்றோர் அல்லது உறவினர்களுக்கு வங்கிகள் மூலம் பணம் அனுப்புகின்றனர். இதை சம்பந்தப்பட்டவர்கள் நேரில் சென்றுதான் பெற முடியும். இதில், புதிய திட்டமாக வீட்டை தேடி வந்து பணம் கொடுக்கும் முறையை தபால் துறை செயல்படுத்த உள்ளது.
இதற்காக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் சர்வதேச கூட்டமைப்பான யூரோகிரோவுடன் தபால் துறை இணைய உள்ளது. இதற்கான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளது. இந்த அமைப்பில் இடம்பெற்றுள்ள வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மூலம் வெளிநாடுகளில் இருந்து பணத்தை அனுப்பவோ அல்லது பெறவோ முடியும்.
வங்கிகளில் இருந்து நேரடியாக பயனாளிகளுக்கு, வங்கிக் கணக்கில் இருந்து வங்கிக் கணக்கு, செலுத்தப்பட்ட தொகையை பயனாளிகளுக்கு தருவது ஆகிய சேவைகள் இதில் மேற்கொள்ளப்பட உள்ளன.
வங்கிக் கணக்கில் இருந்து பயனாளிகளுக்கு பணம் தரும் திட்டம், செலுத்தப்பட்ட தொகையை பயனாளிகளுக்கு தரும் திட்டம் ஆகியவை மூலம் வெளிநாட்டில் இருந்து ஒருவர் உங்களுக்கு பணம் அனுப்பி வைத்தால் போஸ்ட்மேன் நேரடியாக உங்கள் முகவரியை தேடி வந்து பணம் கொடுப்பார். அதேபோல், தபால் துறை மூலம் நீங்களும், வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு பணம் அனுப்ப முடியும். இதற்கான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளது.
நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!
| < Prev | Next > |
|---|





