தமிழ்வணிகம்.காம் தளத்தின் சார்பில் ஒவ்வொரு துறையிலும் சாதனைசெய்பவர்களை அறிமுகப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் இக்கட்டான சூழ்நிலையில் அவர்கள் எப்படி அந்த சூழ்நிலையை எதிர்கொண்டார்கள் என்பதனையும் நம் வாசகர்களுக்கு தருகிறோம். ஏனெனில் ஒவ்வொருவர் வாழ்விலும் இக்கட்டான சூழ்நிலையில் அவர்கள் எடுக்கும் முடிவுகள்தான் அவர்களை சாதனை நோக்கி பயணிக்க முடியும். எனவே சாதனை செய்தவர்களின் குறிப்புகள் அவர்களுக்கு உதவலாம் என்ற நோக்கில்..
அதுபோல் இப்போது நாம் பார்க்கவிருப்பது அமெரிக்காவில் கடும் பொருளாதார சரிவுகள் மற்றும் தொடர்ச்சியான வங்கிகளின் திவால்கள் என்று கடும் பொருளாதார நெருக்கடியிலும் மேகக் கணிமை நுட்பம் எனப்படும் க்ளவுட் கம்ப்யூட்டிங் துறையில் Tonido Plug எனும் வன்பொருளை வெளியிட்டு(Hardware), அமெரிக்கர்கள் புதிய முதலீடுகளை தவிர்த்தநிலையிலும் மதன் அவர்களின் வன்பொருளும் , மென்பொருளும் அமெரிக்க சந்தையில் இன்று
வரை சிறப்பான முறையில் சென்றுகொண்டிருக்கிறது.
இதைவிட சிறப்பு மனிமேனேஜர் எனும் தனியாளர் கணக்கு மென்பொருள் ( Accounting Software) ஒன்றினையும் தமிழ் உட்பட 25 மொழிகளில் இயங்கும்படி இலவசமாக கட்டற்ற முறையில் வெளியிட்டுள்ளார். தரவிறக்கச்சுட்டி http://www.codelathe.com/mmex/ .
இதோ அவர் தமிழ்வணிகம்.காம் ற்காக அளித்த சிறப்பு நேர்க்காணல்.
வணக்கம் மதன், உங்களைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு தாருங்கள்.
என் பெயர் மதன் கனகவேல். நான் Codelathe என்ற தனியார் மென்பொருள் நிறுவனத்தை 2009-ல் உருவாக்கி நடத்தி வருகிறேன்.
உங்கள் பிறப்பு, படிப்பு வேலை. ஆகியவற்றைப் பற்றி!
நான் பிறந்தது மதுரை; வளர்ந்தது பெரும்பாலும் சென்னை. அண்ணா பல்கலையில் இயந்திரவியல் பொறியியல் படித்தேன் . பின்பு அமெரிக்காவின் பாஸ்டன் பல்கலையில், Mechanical Engineering/Control Systems/Robotics-இல் நிறைஞர் பட்டம் பெற்றேன். படிப்பு முடிந்த பின் ஒரு Robotics நிறுவனம் பின்னர் ஒரு online gaming நிறுவனத்தில் வேலை பார்த்தேன். அதன் பிறகு எனது சொந்த நிறுவனமான Codelathe-தை தொடங்கி நடத்தி வருகிறேன்.
தமிழ் மட்டுமன்றி பல மொழிகளில் நீங்கள் இலவச தனியாள் கணக்கியல் மென்பொருள் வெளியிட்டிருக்கறீர்கள். அதை வெளியிடலாம் என்று எப்படி ஆர்வம் வந்தது. தமிழ் மென்பொருளுக்கு தமிழர்களிடம் வரவேற்பு இருந்ததா?
நான் பாஸ்டனில் வேலை பார்க்கும் பொழுதே தனியாள் கணக்கியல் மென்பொருள் ஒன்றை என்னுடைய வீட்டு கணக்கு வழக்கு பார்ப்பதற்காக எழுதினேன். என்னுடைய மாமனார் அவருடைய தனியாள் கணக்குகளை பராமரிக்க சில வசதிகளை கேட்டார்கள். அப்படி உருவானது தான் "Money Manager"-இன் முதல் வெளியீடு. அதை வெளியிட்ட பின்பு, நிறைய பேர் அதில் ஆர்வம் காட்டியதால், மென்மேலும் சில வசதிகளை அதில் சேர்த்தேன். பின்னர் சிலர் அதை தமிழில் மொழி பெயர்த்து தரவும் ஆர்வம் காட்டினர். அப்படித்தான் தமிழிலும் மற்ற மொழிகளிலும் Money Manager-ஐ வெளியிட முடிந்தது.
மேகக்கணிமை தான் இனி வரும்காலத்தில் பயன்படும் என்று நுட்பம் என்று கூறப்படுகிறது. அதைப்பற்றிய உங்கள் கருத்து என்ன?
மேகக்கணிமை தான் வரும்காலத்தின் கணிமை. நல்ல இணையத் தொடர்பு இருக்கும் நாடுகளில் இப்பொழுதே மக்கள் மேகக்கணிமை பயன்பாடு மென்பொருட்களைத்தான் பயன்படுத்துகிறார்கள். நல்ல இணையத் தொடர்பு இல்லாத நாடுகளில் மேகக்கணிமை பயன்பாட்டுக்கு வர சில காலம் ஆகும்; ஆனால் அந்த காலம் வெகு தொலைவில் இல்லை.
மேகக் கணிமை நுட்பத்தை பயன்படுத்தித்தான் நீங்கள் சில மென்பொருட்களை வெளியிட்டுள்ளீர்கள். அதைப்பற்றிய உங்கள் கருத்து என்ன?
மேகக்கணிமை தான் வரும்காலத்தின் கணிமை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மேகக்கணிமையின் பெரிய குறை உங்களுடைய கணினி வளம் (resources) உங்கள் கட்டுபாட்டில் இல்லாமல் இருப்பது தான். அதனால் தான் நான் Tonido-வை உருவாக்கினேன். Tonido உங்கள் கணினியின் திறனையும் பயன்படுத்தி, அதே சமயத்தில் உங்கள் கணினி வளங்களை உங்கள் கட்டுப்பாட்டிலேயே வைக்க உதவுகிறது. சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், Tonido மேகக்கணிமையை உங்கள் மேசைக் கணினிக்கே கொண்டுவருகிறது. (Tonido brings cloud computing to your desktop).
உங்கள் மென்பொருள் ஆராய்ச்சி பற்றி கூறிட முடியுமா?
எனக்கு Tonido-வை உருவாக்க கிட்டத்தட்ட இரண்டாண்டு காலம் ஆனது. அதை உருவாக்கும் காலத்தில் நிறைய தொழில்நுட்ப சவால்களை சமாளிக்க வேண்டி இருந்தது. கணினி வலைப்பின்னலை எப்படி தயார்படுத்துவது என்பதை தெரியாதவர்களுக்கும் எளிமையான முறையில் அதை செய்வதற்கு நாங்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகளும் இந்த சவால்களில் அடங்கும். அதற்கு நாங்கள் மென்பொருள் ஆராய்ச்சிகள் பலவற்றை மேற்கொள்ள வேண்டி இருந்தது.
திறவூற்று மென்பொருட்கள் பற்றிய உங்களது கருத்து? உங்களது முயற்சி? தமிழில் திறவூற்று மென்பொருட்கள் முன்னேற்றம் பற்றி கூற முடியுமா?
திறவூற்று மென்பொருட்கள் கணிமை நுட்ப முன்னேற்றங்களில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. எங்கள் "Money Manager" மென்பொருள் இந்த அளவுக்கு முன்னேற்றம் அடைய முக்கிய காரணம் திறவூற்று தொழில் நுட்பம். "Money Manager" இருபத்தி ஐந்து மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இது திறவூற்று தொழில் நுட்பத்தால் மட்டுமே சாத்தியமானது.
நீங்கள் டொனிடோ எனப்படும் அப்ளிகேசன் சர்வர் பற்றியும், டொனிடோ ப்ளக் வன்பொருள் பற்றியும் விளக்க முடியுமா? இது எதிர்காலத்தில் எப்படி பயன்பெறும்.
Tonido உங்களுடைய மேசைக் கணினியில் இயங்கக்கூடிய ஒரு மென்பொருள். இந்த மென்பொருளை நுட்பம் அதிகம் அறியாதோர் கூட எளிதில் நிறுவிப் பயன்படுத்தலாம். இதன் மூலம் உங்களுடைய வீட்டு கணினியில் இருக்கும் கோப்புகள், Tonido செயலிகளை இணைய இணைப்பின் வழியே Tonido-வின் மூலம் நீங்கள் எங்கு இருந்தாலும் பயன்படுத்தலாம். இணைய தள உலாவி (Internet browser) மட்டும் இருந்தால் போதும். உங்கள் செல்பேசியில் (mobile phone) கூட இதை எளிதில் பயன்படுத்தலாம்.
Tonido Plug என்பது ஒரு சிறிய அளவில், மிகவும் குறைந்த விலையில், மிகவும் குறைந்த மின்சக்தியை கொண்டு இயங்கும் ஒரு வன்பொருள் - தீப்பெட்டி அளவில் ஒரு சிறிய கணினி. இந்த கணினி Tonido மென்பொருளோடு செயல்படுகிறது. நீங்கள் Tonido மென்பொருளை உங்கள் மேசைக் கணினியில் நிறுவியிருந்தால், உங்கள் கோப்புகள், Tonido செயலிகளை நீங்கள் எங்கிருந்தும் இணையம் மூலம் பயன்படுத்த Tonido Plug இன்னொரு வழியாகும் - அதுவும் குறைந்த மின்சார செலவில் (சுமார் 5 வாட்ஸ்). இந்த Tonido Plug உடன் உங்களது வண்தகட்டை இணைத்துவிட்டால் நீங்கள் உங்கள் வண்தகட்டிலுள்ள கோப்புகளை இணையம் மூலம் எங்கிருந்தும் எளிதாகப் பயன்படுத்த இயலும்.
அமெரிக்கா கடும்பொருளாதார சரிவை சந்தித்தபோது நீங்கள் எப்படி உணர்ந்தீர்கள்? அந்த இக்கட்டான சூழ்நிலையில் நீங்கள் உங்கள் தயாரிப்புகளை எப்படி அமெரிக்க மக்களிடைய சேர்த்தீர்கள்? அந்த நேரத்தில் நிச்சயமாக நீங்கள் ஒரு இக்கட்டான சூழ்நிலையை சந்தித்திருப்பீர்கள் இல்லையா? அந்த இக்கட்டான சூழ்நிலையை நீங்கள் எப்படி சமாளித்தீர்கள்?
2008-ல் அமெரிக்காவின் கடும்பொருளாதார சரிவு தொடங்கியது. நாங்கள் Tonido உருவாக்க தொடங்கிய கால கட்டமும் அது. Tonido-வை நாங்கள் மார்ச் 2009-ல் (பொருளாதார சரிவின் நடுவில்) வெளியிட்டோம். எங்கள் Tonido Plug-ஐ $99 (99 அமெரிக்க டாலர்கள்) விலைக்கு விற்றோம். இந்த விலை அப்போது இருந்த தொழில்நுட்ப சந்தையில் விற்க சிறந்த விலையாக இருந்தது. மேலும், அப்போது இருந்த நிலவரத்தில், எங்கள் வன்பொருள் செலவை குறைக்க பயனுள்ளதாக இருந்தது. அதனால் இந்த கடும்பொருளாதார சரிவு எங்களுக்கு அவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தவில்லை.
"டொனிடோ ப்ளக்" வன்பொருள் "மார்வெல் ஷீவா ப்ளக்" போன்ற வன்பொருட்களிலிருந்து எவ்வகையில் மாறுபட்டது?
Tonido Plug வன்பொருள் Marvell-இன் Sheeva Plug-இன் அடிப்படையில் தான் உருவாக்கப்பட்டது. Sheeva Plug-ஐ ஒரு நுட்பம் அறியாதவர் புரிந்துகொண்டு பயன்படுத்துவது மிகவும் கடினம் - ஓரளவு மென்பொருளை பற்றி தெரிந்தவர்களால் மட்டுமே அதை உபயோகப்படுத்த முடியும். இதை எளிமைப் படுத்தவே Tonido Plug வன்பொருள் Tonido மென்பொருளுடன் வருகிறது. அதே சமயத்தில் Marvell-இன் Sheeva Plug வைத்திருப்போர் அதில் Tonido மென்பொருளை நிறுவிப் பயன்படுத்துவதும் மிகவும் எளிமையானது.
உங்கள் "டொனிடோ ப்ளக்" வன்பொருளை எப்படி மற்ற, அப்ளிகேசன் சர்வர் மென்பொருள் கூட இல்லாத, "ப்ளக் சர்வர்கள்" விலைக்கோ அல்லது அதைவிட குறைவான விலைக்கோ கொடுக்க இயலுகிறது?
நான் இதற்கு முன்பே சொன்னபடி, மற்ற Plug சர்வர்கள் மென்பொருட்கள் உருவாக்கும் நுட்பவியளாலர்களுக்கு ஏற்ற மாதிரியானவை. ஆனால் எங்கள் Tonido Plug சாதாரண மக்களும் பயன்படுத்தகூடியது. அதனால் எங்கள் Plug-குகள் நிறைய அளவில் விற்பனை ஆகக்கூடிய வாய்ப்பு இருப்பதால், எங்களால் இந்த விலைக்கு கொடுக்க முடிகிறது.
ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தின் நிறுவனராக உங்கள் பார்வையில் இந்தியாவின் மென்பொருள் சந்தை எப்படி இருக்கிறது? மென்பொருள் நுட்பவியலாளர்கள் எப்படி இருக்கிறார்கள்.
இந்தியாவை பொறுத்த மட்டில், மென்பொருள் சந்தை நன்கு உருவான சந்தையாக இப்போது இல்லை. பெரும்பாலான மக்கள் மென்பொருட்களை வாங்கி உபயோகிப்பதில்லை. கணினியுடன் என்ன மென்பொருள் வருகிறதோ, அதை மட்டுமே வைத்து உபயோகப்படுத்துகிறார்கள். இதை வைத்து பார்க்கும் பொழுது, இந்தியாவில் மேசைக்கணிமை சார்ந்த மென்பொருள் சந்தை வளர இன்னும் சில காலம் ஆகும். ஆனால், செல்பேசி சார்ந்த கணிமை சந்தை வளர சந்தர்ப்பம் நன்றாக உள்ளது.
இந்தியாவில் மென்பொருள் நுட்பவியலாளர்கள் பெரும்பாலும் கட்டளைக்கு வேலை செய்பவர்களாக மட்டும் இருக்கிறார்கள். இந்த துறையில் மேலும் வளர வேண்டும் என்றால் மென்பொருள் துறையின் மீது தீவிர ஆர்வமும், புதிய தொழில்நுட்பங்களை கற்று கொள்ளவேண்டும் என்ற ஆசையும், தங்கள் வேலைக்கு அப்பாற்பட்டதை கற்றுகொள்ளும் திறனையும் ஆர்வத்தையும் உருவாக்கிக்கொள்வது மிகவும் அவசியம்.
என்னைப் பற்றியும், என்னுடைய நிறுவனம், மென்பொருள் பற்றியும் என்னுடைய கருத்துகளை தமிழ்வணிகம் வாசகர்கள் இடையே பகிர்ந்து கொள்ள கொடுத்த இந்த அறிய வாய்ப்புக்கு நன்றி. வணக்கம்.
மதன் கனகவேல்
--------------------------------------------------
பி.குறிப்பு: மதன் கனகவேல் அவர்களிடமோ அல்லது அவரின் மென்பொருட்கள் பற்றி கேள்வி கேட்க விரும்புவோர்கள் பின்னூட்டம் வழியாக கேள்விகள் கேட்கலாம்.
நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!






Money Manager Ex மென்பொருளின் தமிழாக்கத் திட்டத்தில் நானும் தமிழா! முகுந்த் அவர்களும் பங்கேற்றோம் என்பதில் கூடுதல் மகிழ்ச்சி.
திரு. மதன் கனகவேல் அவர்களின் Tonido மென்பொருளை பயன்படுத்தி வருகிறேன். வீட்டுக் கணினி பயனாளர்களுக்கு இது ஒரு சிறந்த மென்பொருள்.
Tonido Plug வண்பொருள் ஒரு சிறந்த வருங்கால நுட்பம் என்பதில் ஐயமில்லை.
திரு. மதன் கனகவேல் அவர்களுக்கும், தமிழ் வணிகம் குழுவுக்கும் வாழ்த்துக்கள்