Saturday
Sep 04th
Text size
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மைக்ரோசாப்ட் சிறந்த நுட்ப நிறுவனமல்ல. hiகோபி!

E-mail Print PDF
higopiவணக்கம்.  இந்த பேட்டி வாயிலாக தமிழ் வணிகம் வாசகர்களுடன் என்னை பற்றியும் எனது தமிழிணைய எண்ணங்கள், பங்களிப்புகள் பற்றியும் பகிர்ந்து கொள்ள வாய்ப்பளித்தமைக்கு நன்றி.இதோ உங்கள் கேள்விகளுக்கான பதில்கள்:
தமிழ் இணைய உலகில் தனி முத்திரை பதித்துள்ள தங்களைப் பற்றிய சிறு அறிமுகம்.

இணையத்தில் தகடூர் கோபி என்று அறியப்பட்ட எனது இயற்பெயர் கோபாலகிருஷ்ணன். பிறந்த ஊர் தருமபுரி. ஓசூர் அதியமான் பொறியியல் கல்லூரியில் இளநிலை மின்பொறியியல் பட்டம் பெற்றேன். பின்னர் அண்ணா பல்கலைக் கழகத்தில் முதுநிலைத் தகவல் தொழில்நுட்பப் பட்டயம் முடித்தேன்.

சப்தகிரி பொறியியல் கல்லூரி, தமிழ்நாடு மின்வாரியம் மற்றும் சில சிறு மென்பொருள் நிறுவனங்களில்  பணியாற்றியுள்ளேன். இப்போது ஐதராபாத்தில் பன்னாட்டு மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறேன்.

hi-gopi தளத்தின் மூலம் இணைய வழியே இந்திய மொழிகளில் தட்டச்சு செய்யும் வசதி,  tamil-key, என்ற தங்களின் மென்பொருட்கள்  இணையத்தில்தமிழ்ப் பயன்பாட்டுக்கு முக்கியக் காரணியாக விளங்குகின்றன.
அவற்றை வடிவமைக்கும் ஆர்வம் வந்தது எப்படி?
உருவாக்கும் வேளையில் சந்தித்த சவால்கள் என்னென்ன?. நீங்கள் உங்கள் உருவாக்கியுள்ள தட்டச்சு முறைகளின் சிறப்பம்சம் என்ன?

திரு.சுரதா யாழ்வாணன் அவர்களின் புதுவைத் தமிழ் மாற்றியைப் பயன்படுத்திய போது அதனை மேம்படுத்திப் புதிதாய் வெளியிட ஆர்வம் கொண்டு அவரை தொடர்புகொண்டேன். அதற்காக அவர் ஒப்புதல் அளித்துத் தகடூர் தமிழ் மாற்றியின் உருவாக்கத்தில் ஒவ்வொரு நிலையிலும் ஆலோசனை வழங்கினார். அதன் பின் அந்த நிரல் மூலத்தையே பிற இந்திய மொழிகளுக்கும் விரிவாக்கி வெளியிட்டேன்.

இரு பெட்டிகளில் தட்டச்சுமாறு இருந்த சுரதாவின் புதுவை தமிழ் மாற்றியை ஒரு பெட்டியில் தட்டச்சுமாறு மாற்றுவது மிகப் பெரிய சிக்கலாக இருந்தது. பெட்டியின் நடுவில் தட்டச்சும் போது ஒவ்வொரு எழுத்தும் தட்டச்சிட்டவுடன் உரையின் கடைசிக்கு கர்சர் ஓடிவிடும். இது போல நுட்பரீதியான சிக்கல்களை கடந்து இப்போது ஓரளவு பயன்படுத்தும் வகையில் இருக்கிறது. இம்மாற்றிகளின் பயனர்கள் இன்னும் சில மேம்பாடுகளுக்கு யோசனை அளித்துள்ளனர். அடுத்து வரும் வெளியீடுகளில் மேம்படுத்த திட்டமிட்டுள்ளேன்.

இம்மாற்றிகளின் சிறப்பம்சங்கள்:
  • எல்லா மாற்றிகளிலும் Phonetic மற்றும் Inscript Typewriter முறைகளில் தட்டச்சும் வசதி
  • தமிழ் மாற்றியில் கூடுதலாக தமிழ் தட்டச்சு மற்றும் தமிழ்99 முறைகளில் தட்டச்சும் வசதி
  • தட்டச்சு உதவிப் பட்டை மற்றும் விசைப்பலகை வரைபட உதவி
  • எந்த வலைத் தளத்துடனும் இம்மாற்றிகளை எளிதில் இணைத்து பயனர்களுக்கு இந்திய மொழிகளில் தட்டச்சும் வசதியை அளிக்கலாம்
தமிழ்விசை (tamil-key) ஃபயர்ஃபாக்ஸ் நீட்சி, தமிழா! முகுந்த் அவர்களால் உருவாக்கப்பட்டு, வாய்ஸ் ஆன் விங்க்சால் மேம்படுத்தப்பட்டது. இந்த நீட்சியை மேலும் மேம்படுத்த முகுந்த் அவர்களிடம் ஒப்புதல் பெற்று  0.3 வெளியீட்டில் இருந்து நான் மேம்படுத்திப் பராமரித்து வருகிறேன்.

இந்த நீட்சியின் மேம்படுத்துதலின் போது கூகிள் மின்னஞ்சல் போன்ற செறிவுரையில்(richtext) தமிழ் தட்டச்சு வருமாறு செய்வது நுட்பரீதியாக பெரிய சிக்கலாய் இருந்தது.

தமிழ்விசையின் சிறப்பம்சங்கள்:
  • தமிழ்99, பாமினி,பழைய/புதிய தட்டச்சு, அஞ்சல் உட்பட ஏழு வகையான தட்டச்சு பலகை முறைகளில் தட்டச்சிடலாம்
  • ஃபயர்ஃபாக்ஸ் உலாவியின் உள்ளே எந்த உரைப் பெட்டியிலும் தமிழில் தட்டச்சிடலாம்
  • பயனர் விருப்பத் தெரிவுகள் மூலம் பல்வேறு வசதிகளை அவர்களுக்கு ஏற்றபடி மாற்றியமைத்துக் கொள்ளலாம்

கணிணி அறிவு பெற்ற பெரும்பாலானவர்கள் ஆங்கிலத்தையே அதிகம் பயன்படுத்துவர். அரிதாகச் சிலர் தமிழ் தாழ்ந்து போகாமல் காப்பர். மென்பொருள் துறையில் உள்ள உங்களுக்கு தமிழ் மீது தணியாத தாகம் வந்தது எப்போது? அந்தத் தாகத்தைத் தூண்டிய நிகழ்வு ஏதும் இருக்கிறதா?

தமிழ் வலைப்பதிவுகளின் துவக்க காலத்தில் பல்வேறு வலைப்பதிவுகளை படிக்கும் ஒரு பாமரத் தமிழனாய் எனது தமிழார்வம் இருந்தது. அதன் பின் 2004 ஆம் ஆண்டில் இருந்து இரண்டு தமிழ் வலைப்பதிவுகளை நானும் துவங்கி எழுதினாலும் தமிழ் உள்ளடக்கத்துக்கு பெரிதாய் ஏதும் பங்களிக்க வில்லை. பெரும்பாலும் எனது வலைப்பதிவுகள் இணைய நுட்பம், மென்பொருள் உருவாக்கம், வெளியீடு குறித்தே இருக்கிறது.
இணையத்தில் தமிழ் இலக்கியத்தை பரப்புவோரை பார்த்து வியந்து போகும் எளிய தமிழ் நுட்பவியலாளனாகத் தான் இன்று வரை இருக்கிறேன்.

இதுவரை தமிழ் கணிணித்துறைக்கு அளித்துள்ள மென்பொருட்கள் பற்றி அறியத் தரலாமா?
  • தகடூர் தமிழ் மாற்றி - இணையத்தில் தமிழில் தட்டச்சிடுவதற்காக
  • உமர் பன்மொழி மாற்றி - இந்தியாவின் பிற மொழிகளுள் தெலுங்கு, மலையாளம், கன்னடம்,ஒரியா,பெங்காலி, பஞ்சாபி, குசராத்தி மற்றும் இந்தி ஆகியவற்றுக்கான தட்டச்சுக் கருவி(தேனீ எழுத்துரு அளித்த அமரர் திரு. உமர் அவர்களின் நினைவாக இந்தப் பன்மொழி மாற்றிக்கு அவர் பெயர் சூட்டப்பட்டது).
  • அதியமான் எழுத்துரு மாற்றி - தமிழ் இணையப் பக்கங்களில் காணப்படும் பல்வேறு எழுத்துருக்கள்/குறியேற்றங்களால் ஆன பக்கங்களை ஒருங்குகுறிக்கு மாற்றிப் படிக்க உதவும் ஒரு கருவி.
  • அதியன் ஃபயர்ஃபாக்சு நீட்சி - அதியமான் எழுத்துரு மாற்றியின் ஃபயர்ஃபாக்ஸ் நீட்சி வடிவம்.
  • TABUni/TAMUni/Unicode எழுத்துருக்கள் - பனாசியா நிறுவனம் வெளியிட்ட சில அழகிய எழுத்துருக்களை ஒருங்குகுறிக்கு மாற்றி அளித்துள்ளேன்.
  • தமிழ் விசை ஃபயர்ஃபாக்சு நீட்சி - ஃபயர்ஃபாக்சு இணைய உலாவிக்குள் எந்த வலைப்பக்கத்தில் உலாவினாலும் (உதாரணமாக ஜி-மெயில், யாகூமெயில்) அதற்குள் தமிழில் தட்டச்சிட உதவும் ஃபயர்ஃபாக்ஸ் நீட்சி இது. தமிழா! முகுந்த் அவர்களால் உருவாக்கப்பட்டு, வாய்ஸ் ஆன் விங்க்சால் மேம்படுத்தப்பட்ட இந்த நீட்சியைத் தற்போது நான் மேம்படுத்திப் பராமரித்து வருகிறேன்.

தமிழ் மென்பொருட்களை உருவாக்கும் ஆர்வமுடையவர்களுடன் இணைந்து செயல்படுவதில் தடை ஏதும் இருக்கிறதா? இணையத் தமிழ் ஆர்வலர்களை இணைப்பதற்கு ஏதும் முயற்சி எடுத்திருக்கிறீர்களா?

இன்றைய தமிழ் மென்பொருள் சூழல் அனைவரும் இணைந்து செயல்படும் வண்ணம் தடையேதும் இன்றி மிகச் சிறப்பாகவே இருக்கிறது. தமிழா! முகுந்த் அவர்கள் முன்னெடுப்பில் கட்டற்ற தமிழ்க் கணிமை குழு இத்தகைய தமிழ்நுட்ப ஆர்வலர்களை ஒன்றினைக்கும் ஒரு முயற்சி. இது போலவே பல்வேறு திட்டங்களில் தமிழ்நுட்ப ஆர்வலர்களுடன் இணைந்து  இயங்கினாலும் நான் இதுவரை தமிழ்நுட்ப ஆர்வலர்களை இணைக்க தனிப்பட்ட முயற்சி ஏதும் எடுத்ததில்லை.

திறந்த மூலநிரல் (open Source softwares) பற்றிய உங்கள் பார்வை. ஆனால்என்னதான் open Source software பயன்படுத்தினாலும் மைக்ரோசாப்ட் மென்பொருள்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளதே அது ஏன்?

திறவூற்று நிரல் (Open Source) என்பது உள்ளே என்ன இருக்கிறது என்று எல்லாரும் அறியுமாறு பயன்படுத்த அளிப்பது. கட்டற்ற (Free) மென்பொருள் அதை அவர்கள் விருப்பப்படி மாற்றிக் கொள்ளும் உரிமையை அளிப்பது.
உதாரணமாக, ஒரு தொலைக்காட்சிப் பெட்டியை எடுத்து கொள்ளலாம்.  அதன் உள்ளே இருக்கும் மின்னணு பட்டிகள், இணைப்புகள் முதலானவை அதை வாங்கும் அனைவருக்கும் வெளிப்படையாய் அளிக்கப்படுகிறது. நுட்பம் அறிந்த எவரும் உள்ளே இருப்பதை திறந்து பார்க்க/மாற்ற இயலும். இவ்வாறு மாற்றினால் அந்த தொலைக்காட்சி பெட்டியின் நிறுவனம் அளிக்கும்  உத்தரவாதம் கிடைக்காது என்பது தவிர பிற சிக்கல்கள் ஏதும் இல்லை. உத்தரவாத ஆண்டுகள் முடிந்த பின் பயனர்கள் அந்த தொலைக்காட்சிப் பெட்டியை என்ன வேண்டுமானாலும் செய்ய இயலும்.

ஒரு தொலைக்காட்சிப் பெட்டியிலேயே நமக்கு கிடைக்கும் இந்த உரிமை மென்பொருளிலும் கிடைத்தால் என்ன? ஒரு மென்பொருளின் நிரலை வெளிப்படையாய் அளிக்காத போது இன்றைய இணைய சூழலில் வங்கிப் பரிமாற்றம் உட்பட என்ன வேண்டுமானாலும் பயனர் அறியாமலேயே செய்துவிட இயலுமே? பெரிய நிறுவனங்கள் அவ்வாறு செய்யாது என நம்புவதைத் தவிர வேறென்ன பாதுகாப்பு ஏற்பாட்டை இத்தகைய மென்பொருள் பயனர்களால் செய்ய இயலும்?

இது போன்ற மூடிய நிரல் மென்பொருள்களை விட கட்டற்ற (Free) அல்லது திறவூற்று நிரல் (Open Source) என்பது நமக்கு முழு உரிமையையும் அளிப்பதால் இத்தகைய மென்பொருட்களையே நான் நம்புகிறேன். ஆதரிக்கிறேன்.

மேலும் கட்டற்ற என்பதில் வரும் Free என்பது இலவசம் என்பதை குறிப்பதல்ல. அது Freedom என்ற முழு சுதந்திரத்தை குறிப்பது. எனவே, கட்டற்ற (Free) அல்லது திறவூற்று நிரல் (Open Source) மென்பொருளை இலவசமாகத் தான் அளிக்க வேண்டும் என்பதில்லை. வணிக ரீதியாகவும் சந்தைப்படுத்தலாம் அதற்கு தடையேதும் இல்லை.

மைக்ரோசாஃப்ட் ஒரு சிறந்த நுட்ப நிறுவனமல்ல. அது மிகச் சிறந்த சந்தைப்படுத்தும் (Marketing) நிறுவனம். எனவே அதன் மென்பொருட்கள் சிறந்தவையாய் இல்லாவிட்டாலும்  கூட அதன் ஆதிக்கத்தை பெருக்க அதனால் இயலும் என்பதே எனது கருத்து.

உங்களுடைய முழுபயன்பாடும் திறந்த கட்ட மூல நிரல்களை மட்டுமே பயன்படுத்துவது போல் இருக்கிறதே... அதன் நோக்கம் என்ன?

நான் முந்தைய கேள்விக்கான பதிலில் சொன்னது போல ஒரு பொருள் விலைக்கு/இலவசமாக அளிக்கப்படும் போது அதை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தும் உரிமையும் பயனர்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்பதே எனது விருப்பம். எனவே தான் ஒரு பயனீட்டாளனாக நான் முடிந்தவரையில் கட்டற்ற/திறவூற்று மென்பொருள்களையே பயன்படுத்துகிறேன். அது போலவே எனது மென்பொருள்கள் அனைத்தையும் முழுவதும் கட்டற்ற/திறவூற்று முறையில் வெளிவருமாறு பார்த்துக் கொள்கிறேன்.

தகவல் தொழில்நுட்பம் எவ்வளவு எவ்வளவு பாராட்டப்பட்டதோ அவ்வளவுக்கவ்வளவு இன்று தலைகீழாக உள்ளது. இதைப் பற்றி உங்கள் பார்வை.

தகவல் தொழில்நுட்ப சூழல் இன்று மிகச் சிறந்த நிலையில் இல்லை எனினும் இது போன்ற சூழ்நிலையை முன்பே பல முறை சந்தித்து இருக்கிறது. இம்முறை இதன் வீச்சு உலக பொருளாதார மந்தநிலை போன்ற பல்வேறு காரணங்களால் சற்று மிகுந்திருக்கிறது. இன்றைய தகவல் தொழில்நுட்ப பணிச் சூழலை கருத்தில் கொண்டு பயந்து போய் தகவல் தொழில்நுட்ப படிப்புகளை மாணவர்கள் தெரிவு செய்யாமல் இருக்க வேண்டாம். அவர்கள் படிப்பை முடித்து வெளி வருவதற்குள் இதுவும் கடந்து போகும் என்பதே எனது நம்பிக்கை.

அனைவருக்கும் பொதுவான சேவை என்று ஒன்று இருந்தாலும் தனிப்பட்ட உங்களின் அடுத்த கட்ட இலக்கு என்ன?
அடுத்த கட்டமாக உடற்குறைபாடுள்ளவர்களுக்கான தமிழ் மென்பொருட்களை உருவாக்க பல்வேறு ஆய்வுரீதியான முயற்சிகளில் இறங்கியுள்ளேன் அவற்றுள் ஒன்று தான் ஔவை உரைபேசி. இன்னும் நிரலாக்கத்தில் உள்ள இந்த மென்பொருள் குறித்து மேலதிகமாக http://www.higopi.com/auvai/ என்ற முகவரியில் காணலாம்


ப்ரியமுடன்,

கோபி
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தங்களது பொன்னான நேரத்தை எங்களுடன் செலவிட்டதற்காக மிக்க நன்றி!. உங்கள் தமிழ்சேவை பல்கிபெருகட்டும்
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
படித்துவிட்டு மறக்காமல் உங்கள் கருத்தக்களை பகிர்ந்துகொள்ளுங்கள்.

நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!
Comments (12)
  • ந.ர.செ. ராஜ்குமார்
    கட்டற்ற தமிழ் மென்பொருள் உருவாக்கத்தில் எண்ணம் கொண்டோருக்கு இந்தப் பதிவு நல்ல ஊக்கமளிப்பதாக உள்ளது. நன்றி திரு.கோபி.
    நன்றி தமிழ்வணிகம்.
  • த*உழவன்.
    சில வருடங்களுக்கு முன் கோபி தட்டச்சைப் பயன் படுத்தியுள்ளேன். தற்போது nhm writer பயன்படுத்துகிறேன். அத்தள மேம்பாடு செய்து கொண்டிருந்த காரணத்தால், மாறினேன். அப்படியே இன்றளவும் தொடருகிறேன்.

    * மைக்ரோசாஃப்ட் தமிழை புறக்கணித்து விட்டது. அதன் திட்டங்களில் தமிழ் இல்லையென்று விக்கிப்பீடியப் பயனர் தெரிவித்திருந்தார். நாமும் அச்சந்தை நிறுவனத்தைப் பின்னுக்கு தள்ளுவோம்.
    அதற்கு ஒரேதீர்வு கட்டற்ற திறவூற்று நிரல்களைப் பயன்படுத்துவதே ஆகும். பின் தானாகவே, அவற்றிற்குரிய இடர்கள் தீர்க்க பல திறனாளர்கள் உள்ளனர் என்பது என் உறுதியானக் கருத்து.

    ஔவை உரைபேசி.ஐ பயன்படுத்தவில்லை. பிறகு எழுதுகிறேன்.காரணம், என்னிடம் கணினியில்லை. அதனால் பயன்படுத்த வில்லை.
    நன்றி! வணக்கம்.
    என்றும் நட்புடன்,
    த*உழவன்.
  • தமிழ்த்தேனீ
    படித்தேன்

    தங்கள் சேவை பாராட்டப்படவேண்டிய நுணுக்கமான சேவை

    என்னைப் போல இணையத்தில் தமிழ்க்கட்டுரைகள், கவிதைகள் எழுதுவோருக்கு மிகவும் பயன்படுகிறது


    நன்றி
  • தகடூர் கோபி
    தமிழ்த்தேனீ,

    நன்றி. உங்கள் பெயர் எனக்கு "தேனீ உமர்" அவர்களை நினைவு கூர்வது போல இருக்கிறது.
  • அண்ணாகண்ணன்
    மிக அருமை.

    கோபி, தமிழ்க் கணிமைக்குக் கிடைத்த சொத்து. அவரின்பணிகளும் நேர்முகமும் பலரின் கண்களைத் திறக்கும் வலிமையுடையவை.

    நல்வாழ்த்துகளுடன்,
    அண்ணாகண்ணன்.
  • தகடூர் கோபி
    அண்ணாக்கண்ணன்,

    மிக்க நன்றி. (நாம் 2007 சென்னை வலைப்பதிவர் பட்டறையில் சந்தித்தது, நீங்கள் காந்தளகம் "மறவன் புலவு" திரு. க.சச்சிதானந்தம் அவர்களுடன் அறிமுகம் செய்தது.நேரமின்மையால் தடைபட்ட நமது உரையாடல்.. இன்னும் நினைவில் நிற்கிறது)
  • பச்ச  - அவ்வை
    அன்பு கோபி
    நீங்கள் உருவாக்கியுள்ள அவ்வை செயலி பயர்பாக்சில் மட்டும்தான் வேலை செய்யுமா?

    அல்லது வேறு உலாவிகளிலும் செயல்படுமா?
  • தகடூர் கோபி
    அன்பு பச்ச,

    அவ்வை இப்போது இன்னும் நிரல் அளவிலேயே உள்ளது. குரல் ஒலிக் கோப்புகளை தன்னார்வலர்கள் சிலர் அளித்துள்ளனர். ஒலிகளை பிரிக்கும் பணியை செய்து வருகிறேன். ஓரளவு வெளியிடத் தகுந்த தரத்தை எட்டும் போது வெளியிட எண்ணியுள்ளேன்.

    இது ஜாவா அடிப்படையில் ஆன ஒரு செயலி. ஃபயர்ஃபாக்ஸ் நீட்சியில் ஜாவா நிரலையும் பயன்படுத்த இயலும் என்பதால் இதை ஃபயர்ஃபாக்ஸ் நீட்சியாகவும் நிரலாக்கி இருக்கிறேன்.

    முதல் வெளியீட்டில் ஃபயர்ஃபாக்ஸில் மட்டும் பணி செய்யும் பின்னாளில் நீட்சி வசதியை அளிக்கும் பிற உலாவிகளிலும் செயல்படுமாறு நிரல்படுத்த இயலுமா என்று பார்க்கிறேன்.
  • கண்ணா  - சிறந்த நேர்க்காணல்
    நிறைய பேர் இன்னமும் www.higopi.com ல் தான் தமிழ் தட்டச்சு பழகுகிறார்கள். அதை உருவாக்கிய கோபி அவர்களுக்கு மிக்க நன்றி!!
  • தகடூர் கோபி
    நன்றி கண்ணா, உண்மையில் எனது மாற்றிகளுக்கு மூல நிரலை அளித்த திரு. சுரதா யாழ்வாணன் அவர்களுக்குத்தான் நான் நன்றி சொல்ல வேண்டும். தகடூர் உட்பட்ட எனது மாற்றிகள் அனைத்தும் அவருடைய நிரலை சற்று மேம்படுத்தியதில் பிறந்ததே.
  • vaduvurkumar
    தங்கள் பணி சிறக்க வாழ்த்துகள் - தகட்டூர் கோபி.
  • தகடூர் கோபி
    நன்றி வடுவூர் குமார்...

Write comment
Your Contact Details:
Comment:
:D:angry::angry-red::evil::idea::love::x:no-comments::ooo::pirate::?::(
:sleep::););)):0
Security
Please input the anti-spam code that you can read in the image.
Last Updated ( Sunday, 20 September 2009 16:36 )  
Banner

எங்கள் செய்திச்சேவையைபெற


1
விஷூவல் மீடியா

ட்விட்டரில் தொடர

உள்நுழைய

  • Login
  • Create an account
    Registration
    *
    *
    *
    *
    *
    REGISTER_REQUIRED