தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான மெட்லைஃப் இந்தியா நிறுவனம் மாதாந்திர நிரந்தர வருமானம் அளிக்கும் புதிய காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஓய்வு பெற்ற பின் ஓய்வூதியம் வசதி இல்லாத தனியார் நிறுவனங்கள் மற்றும் பிற ஊழியர்களை இலக்காகக் கொண்டு இப்புதிய திட்டத்தை இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
பிற காப்பீட்டுத் திட்டங்களில் உள்ளது போல வருமான வரிச் சலுகை மற்றும் பிற சலுகைகளும் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் உள்ளது கூடுதல் சிறப்பம்சமாகும். "மெட் மன்த்லி இன்கம் பிளான்' என்ற பெயரில் இப்புதிய காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
காப்பீட்டுதாரர் திட்டம் முடிவடையும் முன்னர் உயிரிழந்துவிட்டால், அவரது வாரிசுதாரர்களுக்கு மாதந்தோறும் இத்தொகை அளிக்கப்படும். இது தவிர, வழக்கம்போல பிற காப்பீட்டுத் திட்டங்களுக்கு அளிக்கப்படும் போனஸ் உள்ளிட்ட சலுகையும் அளிக்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தத் திட்டத்தில் குறுகிய கால முதலீடு செய்வதற்கும் வாய்ப்பு உள்ளது. தற்போதைய பொருளாதார தேக்க நிலையில் நிரந்தரமான வருமானம் தரும் காப்பீட்டுத் திட்டங்கள் ஏதும் இல்லாத சூழலில் நீண்ட கால பயன் அளிக்கும் இப்புதிய திட்டத்துக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாக நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராஜேஷ் ரெலான் தெரிவித்துள்ளார்.
நிரந்தர மாதாந்திர வருமானம் அளிக்கும் இப்புதிய திட்டத்தை அறிமுகம் செய்ததன் மூலம் வாடிக்கையாளர்களுக்குத் தேவையான அனைத்து காப்பீட்டுத் திட்டங்களும் அளிக்கும் நிறுவனமாக மெட்லைஃப் உயர்ந்துள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். மிக வேகமாக வளர்ந்துவரும் தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களில் மெட்லைஃப் நிறுவனம் முன்னணியில் உள்ளது.
நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!





