ஏ.டி.எம். மோசடிகள்
அவசர உலகத்தில் ஏ.டி.எம் என்பது ஒரு வரப்பிரசாதமாக உள்ளது. 24 மணி நேர சேவை, எந்த ஊரிலும் எந்த நேரத்திலும் பணம் எடுக்கும் வசதி, வெளிïருக்கு செல்லும்போது பணத்தை பாதுகாக்க வேண்டிய பயம் இல்லை என ஏராளமான பலன்கள் ஏ.டி.எம் மூலம் கிடைத்துள்ளது. தொழில் நுட்பம் அதிகரிக்க, அதிகரிக்க நமக்கான வசதிகள் அதிகரிப்பது போல, பிரச்சினைகளும் அதிகரித்து வருகிறது. இந்தப் பிரச்சினை ஏ.டி.எம் வசதியையும் விட்டு வைக்கவில்லை.
உதாரணமாக சில சமயம் ஏ.டி.எம் மூலம் பணம் எடுக்கும் போது, நாம் ஆயிரம் ரூபாய் எடுக்க முயற்சித்தால், 800 ரூபாய் மட்டுமே வரும். ஆனால் நமது கணக்கில் இருந்து ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டு உள்ளதாக ஏ.டி.எம் கணக்கு காட்டும். இதைப்பற்றி நாம் வங்கியில் புகார் அளித்தாலும், ஏ.டி.எம் அளிக்கும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு அவர்கள் நடவடிக்கை எடுப்பதில்லை என்பது வாடிக்கையாளர்களின் கருத்து. சில சமயம் நாம் ஆயிரம் ரூபாய் பணத்தை எடுக்க முயற்சித்தால், ஆயிரத்து 500 ரூபாய் பணம் வரும். ஆனால் நமது கணக்கில் ஆயிரம் ரூபாய் மட்டுமே எடுக்கப்பட்டிருப்பதாக ஏ.டி.எம் கணக்கு காட்டும். இப்படி ஏ.டி.எம் குளறுபடிகள் அதிகரித்து வருகின்றன.
தொழில்நுட்ப கோளாறுகளால் மட்டுமின்றி, மோசடிகளின் காரணமாகவும் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. ஏ.டி.எம் உள்ளே ஏற்படும் மோசடிகள் மட்டுமின்றி ஏ.டி.எம் வெளியேவும் சில மோசடிகள் நடக்கின்றன. எனவே ஏ.டி.எம் மூலம் எப்படியெல்லாம் மோசடி நடைபெற வாய்ப்பு உள்ளது? அவற்றை எப்படி தடுக்கலாம்? என்பது பற்றிய தகவல்களை நிபுணர்கள் மக்களுக்கு தெரிவித்து வருகின்றனர். அந்த தகவல்கள் இங்கு அளிக்கப்படுகின்றது.
குறைந்த தொகை:
மோசடி ஆசாமிகள் மெல்லிய பிளாஸ்டிக் இழைகளை ஏ.டி.எம் இயந்திரத்தில் இருந்து பணம் வரும் துவாரத்தில் வைத்து விடுவார்கள். இதனால் வாடிக்கையாளர் பணம் எடுக்கும் போது முழுப்பணமும் வெளியே வராது அல்லது குறைந்த தொகை மட்டுமே வெளியே வரும். பணம் எடுக்கும் நபர் பணம் வரவில்லையே என நினைத்து தடுமாறிப் போவார். சிறிது நேரம் முயற்சி செய்து பார்த்து விட்டு, பணம் எடுக்க வந்தவர் ஏ.டி.எம் விட்டு சென்று விடுவார். அதுவரை காத்திருக்கும் மோசடி ஆசாமிகள், சம்பந்தப்பட்ட நபர் சென்ற பிறகு, தாங்கள் ஏற்கனவே வைத்திருந்த பிளாஸ்டிக் இழைகளை உருவி, வெளிவராத பணத்தை எடுத்து விடுவார்கள்.
கொக்கி மூலம் திருட்டு:
சில மோசடி ஆசாமிகள், ஏ.டி.எம் இயந்திரத்தில் கார்டை நுழைக்கும் பகுதியில், மெல்லிய கொக்கியுடன் இணைந்த காந்த தகடுகளை வைத்து விடுவார்கள். இதனால் பணம் எடுப்பவர் டெபிட் கார்டையோ, கிரெடிட் கார்டையோ நுழைக்கும்போது அது உள்ளேயே சிக்கி விடும். உள்ளே இருக்கும் காந்த தகடுகள், கார்டில் உள்ள தகவல்களை பதிவுசெய்து விடும். உள்ளே சிக்கிய கார்டை எடுக்க முடியாமல், வாடிக்கையாளர் திணறும்போது மோசடி ஆசாமி வந்து உதவுவது போல நடிப்பார். வாடிக்கையாளரை மீண்டும் ஒருமுறை ரகசிய எண்ணை அழுத்தும்படி சொல்லுவார். அப்போது வாடிக்கையாளர் அழுத்தும் ரகசிய எண்ணை மோசடி ஆசாமி அறிந்து கொள்வார். அதன்பிறகும் கார்டு வெளியே வராததால் வாடிக்கையாளர் ஏ.டி.எம் விட்டு சென்று விடுவார். இதையடுத்து மோசடி ஆசாமி கொக்கியுடன் சேர்த்து உள்ளே சிக்கியிருக்கும் கார்டை வெளியே எடுத்து, மீண்டும் ஏ.டி.எம் இயந்திரத்தில் நுழைத்து, ரகசிய எண்ணை அழுத்தி பணத்தை எடுத்து விடுவார்.
போலி தகடு :
இன்னொரு வகையான மோசடியில் கார்டு தகவலை படிக்கும் போலியான தகடை, ஏ.டி.எம் இயந்திரத்தின் துவாரத்தில் நுழைத்து விடுவார்கள். இதனால் நாம் கார்டை அதில் நுழைத்து பணம் எடுக்கும்போது, நமது கார்டு தகவல்கள் அனைத்தும், சம்பந்தப்பட்ட நபரின் லேப்டாப் அல்லது கம்ப்ïட்டருக்கு சென்று விடும். அதைப் பயன் படுத்தி ஆன்லைன் மூலம் பணத்தை `அபேஸ்' செய்து விடுவார்கள்.
கேமரா :
எ.டி.எம் இயந்திரத்தில் மறைவாக ஒரு சிறிய கேமராவை பொருத்தி விடுவார்கள். வாடிக்கையாளர்கள் ரகசிய எண்ணை அழுத்தும்போது, கேமரா அதனை பதிவு செய்து கொள்ளும். அதுமட்டுமின்றி நமது கார்டு எண்ணும் பதிவு செய்யப்படும். அதைக்கொண்டு போலியான கார்டு ஒன்றை தயாரித்து, பணத்தை எடுத்து விடுவார்கள்.
இதைப்போலவே மோசடி ஆசாமிகள், வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம் மூலம் பணம் எடுக்கும் போது அவர்களின் பின்புறம் நின்று கொண்டு, அவர்கள் பதிவு செய்யும் தகவல்களை பார்த்து விடுவார்கள். அதனைப் பயன்படுத்தி போலியான கார்டு தயாரித்து பணத்தை திருடுவார்கள்.
போலி ஏ.டி.எம் :
வெளிநாடுகளில் மோசடிக்காக பயன்படுத்தப் படும் உத்தி இது. நமது நாட்டில் இதுபோன்ற மோசடிகள் இன்னும் நடக்கவில்லை. இதில் அச்சு அசலாக நமது வங்கியின் ஏ.டி.எம் போன்று ஒரு போலியான ஏ.டி.எம் இயந்திரத்தை உருவாக்குவார்கள். அது தெரியாமல் நாம் கார்டை நுழைத்து பணத்தை எடுக்க முயற்சித்தால், பணம் வராது. அதே சமயம் நமது கார்டு தகவல்களை போலி ஏ.டி.எம் மூலம் பதிவு செய்து கொண்டு, போலி கார்டை தயாரித்து விடுவார்கள்.
மேலே கூறப்பட்டுள்ளவை அனைத்தும், ஏ.டி.எம் எந்திரத்தை பயன்படுத்தி நடக்கும் மோசடிகள் ஆகும். ஏ.டி.எம் இயந்திரத்திற்கு வெளியேயும் மோசடிகள் நடக்க வாய்ப்புகள் உள்ளது. இமெயில் மூலம் நமது இன்டர்நெட் பேங்கிங் பற்றிய தகவலை திருடுவது, ஸ்பாம்மிங், பிஷ்சிங் போன்ற செயல்பாடுகளின் மூலமும் நமது தகவலை திருடி ஆன்லைன் மூலம் பணம் திருடுவது போன்ற மோசடிகளும் நடக்கின்றன.
மோசடிகளை தடுப்பது எப்படி?
ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் எடுக்கும்போது, யாராவது அருகில் இருந்தால் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். மற்ற நபர்களுக்கு தெரியாத வகையில் ரகசிய எண்ணை அழுத்த வேண்டும். ஏ.டி.எம் உள்ளே நுழையும் போதே கார்டை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். ஏ.டி.எம் இயந்திரத்தில் கார்டு சிக்கிவிட்டால் யாரிடமும் உதவி கேட்கக்கூடாது. உடனே ஏ.டி.எம் இயந்திரத்திற்கு அருகில் உள்ள போன் மூலம் வங்கிக்கு தகவல் அளித்து கார்டை முடக்க வேண்டும். கார்டை நுழைக்கும் துவாரத்தில் சிறிய நூல் ஏதாவது தொங்கினால் கார்டை உள்ளே நுழைக்க கூடாது.
இமெயில் மூலம் கார்டு பற்றிய தகவல்களை யாருக்கும் அனுப்பக் கூடாது. உங்கள் ஆன்லைன் கணக்குகளில் யாராவது நுழைய முயற்சிக்கிறார்கள் என்றால் உடனே வங்கிக்கு தகவல் அளிக்க வேண்டும்.
ஏ.டி.எம் மோசடிகளை தடுக்க வங்கிகள் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்த உள்ளன. ஏ.டி.எம் இயந்திரங்களுக்கு கூடுதலான பாதுகாவலரை நியமிக்க இருக்கின்றன. கைவிரல் ரேகைகள் மூலம் ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் எடுக்கும்படியான புதிய வசதிகளை அறிமுகப்படுத்த இருக்கின்றார்கள். அதேசமயம் மோசடிக்காரர்கள் ரகசிய எண்ணை வாடிக்கையாளரிடம் திருடி பணம் எடுத்தால், வங்கிகள் அதை வாடிக்கையாளரின் தவறு என கூறி விடுவார்கள்.
புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பணம் திருடப்பட்டால், அதற்கான ஆதாரம் இல்லை என வங்கிகள் கையை விரித்து விடும் அபாயமும் உண்டு. ஏ.டி.எம் மோசடிகளை தண்டிக்கும் வகையில் நமது நாட்டில் போதுமான சட்டங்களும் இல்லை என நிபுணர்கள் கூறுகிறார்கள். எனவே தவறு நடந்த பிறகு வங்கிக்கும், காவல் நிலையத்திற்கும் அலைவதை விட, தவறு நடக்காமல் பார்த்துக் கொள்வது வாடிக்கையாளர்களின் கையில்தான் உள்ளது.
நன்றி: முத்துச்சரம்
நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!





