கச்சா எண்ணெய் கடந்த ஏழு வாரங்களில் இல்லாத அளவிற்கு விலை உயர்ந்தது. அமெரிக்க வீட்டு வசதி கடன் சந்தையில் ஏற்பட்ட சீர்குலைவால், அமெரிக்காவில் வேலை இழப்போர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தது. ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில், அமெரிக்காவில் 68,000 பேர் வேலையை இழக்கும் நிலை ஏற்படும் என்று மதிப்பீடு செய்யப் பட்டுள்ளது. இந்நிலையில், அம்மாதத்தில் 36,000 பேருக்கு மட்டுமே வேலை இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதனால், வழக்கம்போல் உலகிலேயே அதிக அளவில் கச்சா எண்ணெயை பயன்படுத்தும் அமெரிக்காவில் இதன் பயன்பாடு அதிகரிக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, வெள்ளிக்கிழமையன்று, நியூயார்க் முன்பேர வர்த்தக சந்தையில், ஏப்ரல் மாதத்தில் டெலிவரி செய்வதற்கான ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை, வர்த்தகத்தின் இடையே 1.86 டாலர் அதிகரித்து 82.07 டாலராக உயர்ந்தது. சென்ற ஜனவரி 12-ந் தேதிக்குப் பிறகு தற்போதுதான் இந்த அளவிற்கு விலை உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு வர்த்தகம் முடியும்போது 81.99 டாலரில் நிலை பெற்றது.
நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!





