பரஸ்பர நிதி திட்டங்களில், சென்ற ஏப்ரல் 9-ந் தேதியுடன் நிறைவடைந்த 14 தினங்களில் மட்டும் வங்கிகள், ரூ.50,016 கோடி முதலீடு செய்துள்ளன. இதனையடுத்து, இத்திட்டங்களில் வங்கிகளின் மொத்த முதலீடு ரூ.1.06 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
நடப்பு ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்தில், வங்கிகளிடமிருந்து பொதுமக்கள், நிறுவனங்கள் பெறும் கடன் குறைந்துள்ளது. எனவே, வங்கிகள் அவற்றிடம் உள்ள உபரி நிதியை பரஸ்பர நிதி திட்டங்களில் அதிக அளவில் முதலீடு செய்துள்ளன.
சில்லரை முதலீட்டாளர்கள்
இந்நிலையில், சென்ற ஆறு மாதங்களாக, பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு செய்வதில் சில்லரை முதலீட்டாளர்களும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். சென்ற மார்ச் மாதம் வரையிலான காலத்தில், இந்தியாவிலுள்ள பரஸ்பர நிதி நிறுவனங்களால் நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பு ரூ.7.40 லட்சம் கோடியாக உள்ளது. இதில், சில்லரை முதலீட்டாளர்களின் பங்களிப்பு 26 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இதற்கு முந்தைய ஆறு மாத காலத்தில் இது 24 சதவீதமாக இருந்தது. இதற்கு நாட்டின் பங்கு வர்த்தகத்தில் ஏற்பட்டு வரும் முன்னேற்றமும் ஒரு காரணமாகும். மேலும், சில்லரை முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் பரஸ்பர நிதி நிறுவனங்கள் பல்வேறு அணுகுமுறை களை கையாண்டு வருகின்றன.
பங்கு சார்ந்த திட்டங்கள், கடன் மற்றும் நிதிச் சந்தைகளில் முதலீடு செய்யும் திட்டங்களில் சில்லரை முதலீட்டாளர்கள் மேற்கொள்ளும் முதலீடு அதிகரித்து வருகிறது என இந்திய பரஸ்பர நிதி நிறுவனங்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சென்ற ஆறு மாதங்களில், பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் சில்லரை முதலீட் டாளர்கள் மேற்கொண்ட முதலீட்டின் பங்களிப்பு 65.6 சதவீதத்திலிருந்து 66.7 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதே காலத்தில், அரசின் கடன்பத்திரங்கள், பங்குகள் மற்றும் கடன்பத் திரங்களில் சம அளவில் முதலீடு செய்யும் பரஸ்பர நிதி திட்டங்களில் சில்லரை முதலீட்டாளர்கள் மேற்கொண்ட முதலீடு குறைந்துள்ளது.
நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!





