தொழிலாளர் சேமநல நிதியை (இ.பி.எப்.,)பங்குச் சந்தையில் முதலீடு செய்வது குறித்து வரும் 10ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது. தொழிலாளர் சம்பளத்தில் சேமநல நிதிக்காக பிடித்தம் செய்யப்படும் பணம் பல லட்சம் கோடியை எட்டியுள்ளது. இந்த நிதியை கொண்டு தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் அளிக்கப்படுகிறது.
தற்போது கையிருப்பில் உள்ள பி.எப்., நிதி ஐந்து லட்சம் கோடியில் 15 சதவீத நிதியை, பங்குச் சந்தையில் முதலீடு செய்வதன் மூலம் அதனால் கிடைக்கக் கூடிய வருவாயைக் கொண்டு தற்போது பி.எப்.,க்கு அளிக்கப்படும் 8.5 சதவீத வட்டியை கூடுதலாக உயர்த்தித் தர முடியும் என மத்திய அரசு கருதுகிறது. ஆனால், இதற்கு தொழிற்சங்கத்தினரும், பி.எப்., அமைப்பும் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. கடந்த 10ம் தேதி நடந்த கூட்டத்தில் பி.எப்., வட்டி விகிதத்தை 9.5 முதல் 10 சதவீதமாக உயர்த்துவது குறித்து விவாதிக்கப்பட்டு முடிவு ஏதும் எட்டப்படவில்லை. சேமநல நிதி விவகாரத்தில் விரைந்து முடிவு எடுக்கும் படி தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்துக்கு, நிதி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து தொழிலாளர் நலத்துறை செயலர் பி.சி.சதுர்வேதி கூறியதாவது: இது தொழிலாளர்களின் பணம். எனவே, இதை எச்சரிக்கையாக கையாள வேண்டியுள்ளது. நாங்கள் அதிகம் யோசிப்பதால் எங்களை பழமைவாதிகள் என மக்கள் கூறுகின்றனர். பி.எப்., தொகையின் முதலீடுக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது, என்பதில் கவனமாக உள்ளோம். எந்த முடிவாக இருந்தாலும் அதை பி.எப்., மத்திய அறக்கட்டளை தான் உறுதி செய்யும். வரும் 10ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் இது குறித்து விரிவாக விவாதிக்கப்படும். இவ்வாறு சதுர்வேதி கூறினார்.
நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!





