புது தில்லி, அம்பானி சகோதரர்கள் இடையே ஏற்பட்டுள்ள பிரச்னையைத் தீர்க்க பிரதமர் தலையிடமாட்டார் என அவரது அலுவலக அதிகாரிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.
முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் கிருஷ்ணா-கோதாவரி ஆற்றுப் படுகையில் எண்ணெய், எரிவாயுவைக் கண்டுபிடித்துள்ளது. இந்த ஆலையிலிருந்து எரிவாயுவை தேசிய அனல் மின் நிலையம் (என்டிபிசி) உள்ளிட்ட மின் நிறுவனங்களுக்கு வழங்க விலை நிர்ணயக் கொள்கையை அரசு அறிவித்தது. ஆனால் முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் நேச்சுரல் ரிசோர்சஸ் லிமிடெட் (ஆர்என்ஆர்எல்) நிறுவனத்துக்கு முன்னர் ஒப்புக் கொண்டபடி குறைந்த விலையில் எரிவாயு வழங்க வேண்டும் என வழக்கு தொடர்ந்தார். இதனால் அரசு நிறுவனங்களுக்கு எரிவாயு விநியோகிப்பதும் தடைப்பட்டுள்ளது. தற்போது இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தின் விசாரணையில் உள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனத்தை அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. ஆனால் சகோதரர்கள் இடையிலான பிரச்னையில் அரசு தலையிடாது என்று பெட்ரோலிய அமைச்சர் முரளி தேவ்ரா திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். இந்நிலையில் சகோதரர்கள் இடையிலான பிரச்னையில் பிரதமர் மன்மோகன் சிங் தலையிட்டு தீர்த்துவைப்பார் என செய்திகள் வெளியாயின. ஆனால் அதை பிரதமர் அலுவலகம் தற்போது மறுத்துள்ளது. தற்போது சண்டையிட்டுக் கொள்ளும் இரு சகோதரர்களும் சமரசமாக போய் இணைந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் விரும்புவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு நிறுவனங்களும் சண்டையிட்டுக் கொள்வதற்குப் பதிலாக நாட்டின் வளர்ச்சிக்கு தங்களது பங்களிப்பை அளிக்க வேண்டும் என்றே பிரதமர் விரும்புவதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!





